Latest News

September 02, 2014

உரிமைகளை விட்டுக்கொடுப்பதைவிட போராடி மடிவதே மேலாகும்; இரா.சம்பந்தனின் கவனத்திற்கு!
by admin - 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணம் இலங்கை அரசியலில் தற்பொழுது அதிகம் பேசப்படுகின்ற விடயமாக மட்டுமன்றி தாயக மக்களின் நீண்டகால அரசியலை அபிலாஷைகளுக்குக் குழிபறிக்கின்ற, தாயகக் கனவிற்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் தமிழின விரோதப் போக்கினை வெளிக்கொண்டுவந்த விடயமாகவும் மாறியுள்ளது.
இந்தியாவின் மத்திய அரசாங்கத்தின் அழைப்பில் அங்கு சென்ற தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு இந்திய ஆட்சியாளர்களின் பதில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அவர்களால் வெளியிடப்படுகின்ற சமகால அறிக்கைகள் கோடிட்டுக் காட்டியுள்ளன.
இவ் விஜத்தின் பொழுது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஈழத்தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளை பிரதிபலிக்கக் கூடியவகையிலான, தாயகத்தில் சிங்களம் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்ற தமிழினச் சுத்திகரிப்பை நிறுத்தக்கூடிய வகையிலான, தமிழ் மக்களும் தாயகத்தின் கௌரவமாக வாழக்கூடிய வகையிலான தீர்வுத்திட்ட நகலொன்றை முதன்முறையாகச் சமர்ப்பித்துள்ளார். அதுமட்டுமன்றி இக்குழுவினர் தாயக மக்கள் மீது போரின் பொழுதும், அதற்குப் பின்னரான தற்காலத்திலும் கட்டவிழ்த்து விடப்படுகின்ற சிங்கள, பௌத்த மேலாதிக்க அடக்கு முறைகளையும் தமிழின அழிப்பு மற்றும் தமிழினச் சுத்திகரிப்பினையும் விலாவாரியாக எடுத்துவிளக்கியுள்ளனர்.
இந்த வகையிலான பேச்சுக்கள் இரண்டு தரப்பினர்களுக்கிடையிலும் நீண்ட நேரம் இடம்பெற்றுள்ளன. பேச்சின் முடிவில் தேசியக் கூட்டமைப்பினர் சற்றும் எதிர்பார்க்காத பதிலை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளமை தேசியக் கூட்டமைப்பை மட்டுமன்றி ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது.
ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் இந்தியா பேசவேண்டுமாயின் இலங்கையிலுள்ள சகல சிறுபான்மைக் கட்சிகளும் ஒன்றிணைந்து வரவேண்டும். மலையகத்தில் வாழுகின்ற தமிழர்களையும் தேசியக் கூட்டமைப்பு அரவணைக்க வேண்டும். அரச சார்பற்ற ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை பிரதர் மோடி விடுத்துள்ளாராம்.
மோடியின் இப்பதில் இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றில் புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்தி, இந்திய வம்சாவழியினராகிய மலையகத் தமிழ் மக்களையும் இப்பிணக்கிற்குள் உள்ளீர்த்து தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற நிலையிலிருந்து விலகி வடகிழக்கு பூர்வீகத் தமழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளுக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்குத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தேசம், பூர்வீகம், கலாசார பண்பாடுகள், மொழி, அதற்கென்ற தனித்துவமான வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். அதேபோல் நீண்டகாலமாக வாழ்வியல் உரிமைகளுக்காகப் போராடி பல பின்னடைவுகளைச் சந்தித்த தோற்றுப்போனவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இப்போராட்டத்தில் ஆயுதங்களை ஏந்தி பல்வேறு ஒப்பற்ற தியாகங்களைப் புரிந்தும் நிம்மதியாக வாழமுடியாத நிலையில் தாயகத்திலும் புலத்திலும் ஏதிலிகளாக்கப்பட்டவர்களாகவும் இவர்கள் காணப்படுகின்றனர்.
ஆனால், மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமக்கென்ற பூர்வீகத்தை இலங்கையில் கொண்டிராத மூன்று தலைமுறை வரலாற்றினை மட்டும் கொண்டவர்களாகவே வராற்றின் பக்கங்களில் இடம்பிடித்துள்ளனர். அதேபோல் தாயகம், தேசியம் தொடர்பான சிந்தனையை வெளிக்காட்ட முடியாதவர்களாகவும் அரசியலில் தம்மைத்தாமே ஆளக்கூடிய சுயநிர்ணயமற்றவர்களாகவும் உள்ளனர்.
இந்த இடத்தில் வடகிழக்குத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளும் மலையகத் தமிழ் மக்களின் அபிலாஷைகளும் வேறானவை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
ஆனால் நரேந்திரமோடி இலங்கையில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமாயின் மலையகத் தமிழ் மக்கள் உள்ளிட்ட சகல சிறுபான்மைக் கட்சிகளையும் ஒன்றாக வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது இந்திய மத்திய அரசின் ஈழத்தமிழ் மக்கள் மீதான வெறுப்புணர்வையும் இந்தியாவின் மேலாதிக்க சிந்தனையையும் வெளிப்படுத்துகின்ற செயலாகவும் அமைகின்றது என்றால் மிகையாகாது.
உண்மையில் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை விடயத்தில் தெற்காசியப் பிரந்திய வல்லாதிக்கப் போட்டியில் தனது நாட்டின் பாதுகாப்பிற்காக அக்கறையுடன் செயற்பட வேண்டிய நிலையிலுள்ளது. இதற்காக பிரேமதாஷ – ரஜிவ் காந்தி உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 13ஆவது அரசியல் அமைப்பிற்கு தற்பொழுதும் புத்துயிரூட்ட முற்படுகின்றது. இந்தப் பதின்மூன்று உயிருடன் இருந்தால் இந்தியாவால் இலங்கை விடயத்தில் தங்குதடையின்றி மூக்கை நுழைக்கமுடியும் என்பது இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் சித்தாந்தமாகவுள்ளது. இதில் உண்மையும் இருக்கத்தான் செய்கின்றது.
இந்தியா, இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதற்கு இந்த 13 ஆவது திருத்தச் சட்டமும் அவசியமாகும். ஆனால் 13இன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மாகாணசபைக் கட்டமைப்பின் கீழ் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் பகிந்தளிக்கப்படாமையினால் வடமாகாகண சபைகள் உள்ளிட்ட சகல சபைகளின் செயற்பாடுகளும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் தடுக்கப்படுகின்றது.இதனால் வடக்கில் அரசாங்கத்தினை தமிழ் மக்கள் அமைத்துள்ள பொழுதிலும் மத்தியிலுள்ள சிங்கள அதன் இயங்கு நிலையைத் தடுத்துவருகின்றது.
இந்நிலையில் இந்தியாவின் மத்திய ஆட்சியாளர்களின் ஆதரவைக் கோருவது ஈழத்தமிழ் மக்களுக்குத் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. இவ்வாறானதொரு சூழலில் அண்மையில் இடம்பெற்ற கூட்டமைப்பின் இந்தியப் பயணம், நரேந்திர மோடியுடனான சந்திப்பு, அருடைய இராஜதந்திரம், அவருடைய பதில் என்பன தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் வெளிப்பாடக தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவின் மத்திய அரசாங்கம் இலங்கையில் பிரிவினையை விரும்பவில்லை எனவும் அதனால் தாம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை எதிர்பார்ப்பதாகவும் இந்தியாவில் வைத்தே சொல்லியுள்ளார்.
ஆனால் எழுபதுகளில் இதே தமிழ்த் தலைமைகளின் தனித் தமிழீழப் பிரகடனத்தின் பின்னர் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப்போராடி எமது இனத்தின், தேசத்தின் விடியலுக்காக பல்லாயிரக்கணக்கில் இன்னுயிர்களை ஈகம் செய்துள்ளனர். பல இட்சக்கணக்கான தமிழ் மக்கள் சிங்களத்தால் கொன்றுகுவிக்கப்பட்டுள்ளனர். தயகத் தமிழன் உலகெங்கிலும் ஏதிலிகளாக்கப்பட்டுள்ளான். இவை தமிழீழ வரலாற்றின் கறைபடிந்த பக்கங்கள் என்பதையும் தற்பொழுது இந்தியாவின் அரசியல் நலன்களுக்காக்க கொள்கைகளைக் கைவிடுகின்றவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
இந்தியாவின் அணுகுமுறைகளில் எமது தேசம் பறிபோகின்ற நிலை உருவாகுமாயின் நாங்கள் எமது உரிமைகளுக்காக மீண்டும் ஆயுதங்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்;. அதற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய மூத்தவர்கள் எமது இனத்தின் வாழ்வியல் உரிமைகளை தாரவார்க்க நினைப்பதை எந்தவொரு தன்மானத் தமிழனும் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பதையும் இவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஓன்றுபட்ட இலங்கைக்குள் சிங்களம் எமது மக்களுக்கு வாழ்வியல் உரிமைகளை வழங்கும், நாங்கள் சிங்களத்துடன் இணைந்து வாழலாம், இந்தியாவுடன் பகைத்துக்கொண்டு எம்மால் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது, நாங்கள் தோற்றுப் போனவர்கள் தருவதையோ கிடைகின்றதையோ வேண்டுவோம், எமது மக்களால் வாழ்வியல் உரிமைகளுக்காக இனியும் போராடமுடியாது, அதனைச் சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளாது போன்ற காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றுவதை இனியாவது எமது அரசியல் தலைமைகள் கைவிடவேண்டும்.
தமிழீழத் தாயகமே தமிழரின் பூர்வீக மண், தமிழன் இலங்கையின் மூத்தகுடி, எமது மக்களுக்கு தாயகத்தில் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் நிலபுல சொத்துக்கள் இருந்துள்ளன. அதனைச் சிங்களம் பறித்துள்ளது பேன்ற உண்மைகளை விளங்கியவர்கள், இந்தியாவின் பூகோள நலனுக்காக எமது மக்களின் அபிஷைகளை விட்டுக்கொடுக்க நினைப்பது எமது இனத்திற்குச் செய்கின்ற வரலாற்றுத் தவறாக அமையும்.
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கின்ற அரசயல் வாதிகளும் ஏனையவர்களும் தமிழக மக்களும் எங்களையும் எமது உணர்வுகளையும் தற்பொழுதும் அரவணைத்துக் கொண்டே இருக்கின்றனர். தாயக மக்கள் மீது இவர்கள் தற்பொழுதும் பக்தியுடன் நடந்துகொள்கின்றனர்.
எனவே எமது இனத்தின் வாழ்வியல் உரிமைகளுக்கான இந்தப் போரில் எமது தேசம் விடுதலைபெற்று எமது மக்களும் தன்னாட்சியுடன் கூடிய பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ளும் வரையில் எமது போராட்டப் பாதையின் இலக்கினை விட்டுக்கொடுக்காது குருதியிலாவது சுகந்திர தமிழீழ தாயகத்தை மலரவைக்கப்பதற்கு மீண்டும் நாம் அனைவரும் ஒன்றிணைவது அவசியமாகின்றது.
இந்தச் சுகந்திர வேட்கைப் பயணத்தில் இந்திய, சிங்கள ஆட்சியாளர்களிடம் எமது மக்களை அடகுவைத்து ஏப்பம்விட நினைப்பது எமது இனத்திற்கு செய்கின்ற வரலாற்றுத் தவறாகும. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகல நிலையிலுள்ளவர்களும் விளங்கிக்கொள்வதே இன்றய காலத்தின் தேவையாகும்.
தமிழன் தாயகத்தில் வாழ்ந்தான் என்ற வராலாறு என்றோ எழுதப்பட்டுவிட்டது. ஆனால் தமிழன் அவனுடைய வாழ்வியல் உரிமைகளுக்காகப் போராடி மடிந்தான் என்கின்ற வரலாறு எமது குருதியால் எழுப்பட்டாலும் அதுவும் எமது இனத்திற்குப் பொருமையாகவே அமையும்….
-இராவணன்
« PREV
NEXT »