Latest News

August 26, 2014

காரியாலயத்துக்குள் கிறீஸ் பூதம் - தமிழர்களுக்கு சுதந்திரமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு!
by Unknown - 0

காரைதீவு பிரதேசத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைக் காரியாலயத்துக்குள் கடந்த 25 ஆம் திகதி திங்கட்கிழமை 11.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் நுழைந்தமை இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் இந்நாட்டில் சுதந்திரமில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. எமது கட்சி அலுவலக  உறுப்பினர்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்குவது கண்டனத்துக்குரியதாகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது; இந்நாட்டில் ஏனைய கட்சிகளுக்கு இருக்கும் சுதந்திரம் எமது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு இல்லை. கடந்த காலங்களில் கிறீஸ் பூதம் போன்று தற்போது எமது கட்சி அலுவலகங்களுக்குள்ளும் மர்ம நபர்கள் நுழைவதும் கண்காணிப்பதும் கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்துவதும் போன்ற செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

இவ்வாறு கட்சி அலுவலகங்களுக்குள் இரவு வேளையில் நுழையும் மர்ம நபர்களின் செயற்பாடுகள் திட்டமிட்ட செயற்பாடாகவே இருக்கின்றது. குறிப்பாக இவ் மர்ம நபர்கள் இரவில் நுழைந்து எமது அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை மறைத்து வைத்து விட்டு எமது கட்சி உறுப்பினர்களை உளவியல் ரீதியான பாதிப்புக்குள்ளாக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட முடியும்.

அண்மையில் ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனத்திற்குள் கஞ்சா இருந்ததாக கூறியதைப் போன்று எமது கட்சி அலுவலகத்தையும் கைக்குண்டு வேறு பொருட்களை மறைத்து வைத்து விட்டு எமது செயற்பாட்டை முடக்க நினைக்கின்றனர்.

மக்களுடைய பிரச்சினைகளை இனம் கண்டு தீர்வு வழங்கவே நாம் எமது கட்சி கிளைகளை புனரமைத்து வருகின்றோம். அதேபோன்றே காரைதீவிலும் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

இரவு வேளையில் கட்சி அலுவலகத்திற்குள் நுழையும் மர்ம நபர்கள் அரச புலனாய்வு பகுதியை சேர்ந்தவர்களாகவே இருக்க முடியும் என நாம் சந்தேகிக்கின்றோம். நேற்று முன்தினம்  காரைதீவு அலுவலகத்தில் அத்து மீறி நுழைந்து நீண்ட நேரம் உலாவிய மர்ம நபர் தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஜனநாயக ரீதியில் எமது கட்சியின் செயற்பாடுகளை இங்கு தொடர முடியாத நிலைக்கு இங்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழ் மக்களையும் கட்சியையும் உள ரீதியான பாதிப்பிற்குள்ளாக்கும் கிறீஸ்பூதங்களின் செயற்பாடு கண்டிக்கத்தக்கதாகும்.

இவ்விடயம் தொடர்பில் நாம் வெளிநாட்டு தூதுவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லவுள்ளோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »