Latest News

July 20, 2014

இலவசக் கல்வித்திட்டம் இன்று அழித்தொழிக்கப்படுகிறது - ரணில்
by Unknown - 0

ஐக்கிய தேசியக் கட்சியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலவசக் கல்வித்திட்டம் இன்று மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஆட்சியில் திட்டமிடப்பட்ட  முறையில் அழித்தொழிக்கப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தல்துவை தெஹியோவிற்ற ருவான்வெல மற்றும் கோணகல்தெனிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் அப்பகுதிகளில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
1977ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் சுமார் 40 சதவீத மாணவர்களிடம் தேவையான புத்தகங்கள் இருக்கவில்லை. இதை அவதானித்த ஐ.தே.க. அரசாங்கம் பாடசாலைகளுக்கு இலவசப் புத்தகம் இலவச சீருடை இலவச உணவுத்திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தியது. ஏழைப் பெற்றோர் கல்விக்காக செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கவில்லை. அந்த பொறுப்பை அரசாங்கமே எடுத்துக் கொண்டது. அப்போதெல்லாம் தனியார் வகுப்புகளுக்கு அவசியம் இல்லாதிருந்தது.
ஆனால், இன்று இந்நிலைமை தலைகீழாகி விட்டது. கல்விக்காக பெற்றோர் பெருந்தொகைப் பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது. தனியார் வகுப்புக்கு செல்ல முடியாமல் பரீட்சையில் தேறமுடியாத நிலை காணப்படுகிறது.  ஏழைப்பெற்றோர் எப்படியோ சமாளித்து பிள்ளைகளின் கல்விக்காக இத்தொகையை செலவழிக்கின்றனர். நாம் ஆரம்பித்த இலவச கல்வித்திட்டம் இன்று நீக்கப்பட்டுள்ளது. கல்விக்கான மானியம் குறைக்கப்பட்டு பாதை அபவிருத்திக்கென பெருந்தொகை ஒதுக்கப்படுகின்றது. காரணம் கமிஷன் ஆகும். கல்வித் துறையில் கமிஷன் கிட்டாது. ஆனால் பாதைகள் அமைப்பதால் நூற்றுக்கு 25 சதவீத கமிஷன் பெறமுடியும். 
இவற்றை சுட்டிக்காட்டும் போது என்மீது வசைபாடுகின்றனர். இன்று மக்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டுமானால் ஐ.தே.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.
« PREV
NEXT »