Latest News

July 27, 2014

ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது: சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும்! சிவசக்தி ஆனந்தன்
by Unknown - 0


ஊடகங்கள் மீதான அடக்குமுறை யுத்தத்திற்கு பின்னரும் தொடர்கின்றன. சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் இதில் கவனம் செலுத்தி இலங்கை அரசிற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஓமந்தையில் ஊடகவியலாளர் தடுக்கப்பட்டமை தொடாடபில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு ஜனநாயக நாட்டிலே ஊடகத்துறை என்பது அவசியமானது. அது சுதந்திரமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை யுத்தத்திற்கு முன்னரும் சரி, யுத்தத்திற்கு பின்னரும் சரி ஊடகத்துறையின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்கள் காணாமல் போயிருந்தார்கள். பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். அவற்றுக்கு யார் காரணம் என்பது இன்று வரை கண்டுபிடிக்கப்படாது அவற்றின் வழக்கு விசாரணைகளும் கிடப்பில் உள்ளன. இந் நிலையில் ஊடக நிறுவனங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தொடர்ந்தும் இலக்கு வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

யுத்தம் முடிவடைந்து 5 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றும் பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் இடம்பெற்று வரும் நிலையிலேயே ஊடகவியலாளர்கள் பணியாற்றுகின்றார்கள். குறிப்பாக வடபகுதி ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுவது கடந்த காலங்களில் பல தடவை இடம்பெற்றுள்ளதுடன் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

இந் நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை யாழில் இருந்து ஊடக பயிற்சி ஒன்றுக்காக கொழும்புக்கு சென்ற 16 ஊடகவியலாளர்களை திட்டமிட்டு கைது செய்யும் நோக்கிலும் அவர்களது பயணத்ரைத குழப்பும் நோக்கிலும் இராணுவமும் பொலிஸ்சும் இணைந்து செயற்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பயணித்த வாகனத்திற்குள் இராணுவத்தினரால் கஞ்சா வைக்கப்பட்டு ஊடகவியலாளரை கைது செய்துள்ளனர். இதனை நேரடியாக ஊடகவியலாளர்கள் பார்த்துள்ளனர். இரவு இரவாக அவர்கள் 6 மணித்தியாலங்கள் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ஒரு பக்கம் அபிவிருத்தி என்றும் நல்லெண்ணம் என்றும் கூறிக் கொள்ளும் இந்த அரசாங்கம் ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்தி ஊடக சுதந்திரத்தை மறுப்பதை ஏற்க முடியாது. ஜனநாயகமற்ற மிலேசத்த்தனமான செயற்பாடகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.

எனவே, அரச இயந்திரங்களால் மேற்கொள்ளப்பட்ட இச் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் இது தொடர்பில் சர்வதேச ஊடக அமைப்புக்களும் சர்வதேச நாடுகளும் கவனம் செலுத்தி இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன். எனத் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »