Latest News

July 28, 2014

இலங்கையில் அச்சுறுத்தலுக்குள்ளாகும் ஊடக சுதந்திரம்: அமெரிக்கா கவலை
by admin - 0

இலங்கையில் அச்சுறுத்தலுக்குள்ளாகும் ஊடக சுதந்திரம்: அமெரிக்கா கவலை

இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கவலை வெளியிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்கொன்று கடந்த வார இறுதியில் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்காக அமெரிக்காவின் நிதியுதவியுடன் இந்த பயிற்சி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பயிற்சி கருத்தரங்கு இரத்துச் செய்யப்பட்ட பின்னர், அதில் கலந்து கொள்ள வந்தவர்கள் மற்றும் கருத்தரங்கு இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் அரசாங்கத்தை விமர்சித்த ஊடகவியலாளர் உட்பட நாடு முழுவதிலும் உள்ள ஏனைய ஊடகவியலாளர்கள் பயமுறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் திட்டமிட்டு செயற்படும் குழுவொன்றின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மே மாதம் முதல் இதுவரை இரத்துச் செய்யப்பட்ட மூன்றாது கருத்தரங்கு இதுவாகும்.

பொலிஸார் சம்பவ இடத்தில் இருந்த போதும் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்பதுடன் அச்சுறுத்தியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதேவேளை 11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த 25 ஆம் திகதி யாழ் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகள் பற்றிய செய்திகளை சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு தரப்பினரால் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பாகவும் நாம் கடும் அதிருப்தியினை வெளியிடுகிறோம்.

காரைநகர் இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினரால் இந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இலங்கையில் கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரங்களுக்கு தடையேற்படுத்தும் நபர்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை இருப்பது இந்த சம்பவங்கள் மூலம் தெளிவாகியுள்ளது எனவும் அமெரிக்கத் தூதரகத்தின் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


« PREV
NEXT »

No comments