Latest News

March 11, 2014

இலங்கை ராணுவத்தின் தந்திரங்கள் நிறைந்த மன்னார் புதைகுழி !
by admin - 0


படுகொலைகளின் நிலங்களாக இலங்கை இருந்து வருகிறது என்பதற்கு சமீபகால சான்று மனித புதைகுழிகள்.













இதுவரை மன்னார்,திருகோணமலை,முல்லைத்தீவு, மாத்தளை (சிங்களப் பகுதி)' என பல இடங்களில் மனித புதைகுழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதைகுழிகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இத்தனை நாள் சொல்லி வந்த இலங்கை அரசும் ராணுவமும், ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டத் தொடர் நெருங்கியதிலிருந்து 'இந்த புதைகுழிகள் புலிகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள்' என பிரச்சாரம் செய்து வருகிறது. அவ்வாறாக கடந்த வாரத்தில் கொழும்பு-பி.டி.ஐ. , 'மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட புதைகுழி புலிகள் வலுவாக நிலைக்கொண்டிருந்த இடம்' என்ற இலங்கை அரசின் பொய் செய்தியை எந்தவித ஆராய்வுமின்றி அனைத்து ஊடங்களுக்கும் பகிர்ந்துள்ளது.

ஆனால் இச்செய்தி எந்தவித அடிப்படை ஆதாரங்களையும் கொண்டிருக்கவில்லை.

இந்த புதைக்குழியின் காலக்கட்டத்தை பலர் இந்திய அமைதிப்படையின் காலத்துக்கு(1987) பிறகானதாக தான் கருதுகின்றனர். ஆனால் அதற்கு முன்பே கறுப்பு ஜூலை(1983) படுகொலைகளுக்கு பிறகு டிசம்பர் 4,1984 அன்று மன்னாரில் இலங்கை ராணுவத்தால் 160 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டனர். புலிகளின் கண்ணிவெடியில் மூன்று ராணுவ ஜீப்கள் சிக்கயதற்கு பதிலடி என்ற பெயரில் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டது. மன்னார் மத்திய மருத்துவமனை,தபால் நிலையத்திலிருந்து ஊழியர்கள், பேருந்திலிருந்து ஆண்கள் , பரப்பான்கடலில் ஓர் தாயும் குழந்தையும் உட்பட 12 பேர் மீது துப்பாக்கிச் சூடு என இப்படி 160 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். அதே வேளை 20 பேர் காணாமல் போகினர். இவையெல்லாம் நிகழ்ந்தது இன்று புதைகுழி கண்டெடுக்கப்பட்டுள்ள திருகேதீஸ்வரத்திற்கு மிக அருகிலேயே தான். 
இந்த படுகொலைகளை விசாரிப்பதற்காக அப்போதைய இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவில் மேரி பஸ்டைன்,ஜெயராஜா சிங்கம் என்ற இரு பாதிரியர்கள் பங்குப் பெற்றிருந்தனர். அதில் ஜெயராஜா சிங்கத்தை டிசம்பர் 13,1984 அன்று ராணுவம் சுட்டுக்கொன்று அவருடைய வாகனத்திலேயே எரித்தனர். அடுத்த இருபது நாளில் ஜனவரி 6,1985 மேரி பஸ்டைனும் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதிரியார்கள் படுகொலைச் செய்யப்பட்டதோடு 1984 மன்னார் படுகொலைகள் மீதான விசாரணை முடங்கிப் போனது. 
1984 மன்னார் படுகொலைகள் பற்றி 27 ஜனவரி 1985 அன்று லண்டன் சண்டே டைம்ஸில் வெளியான செய்தியிலும், 15 பிப்ரவரி 1985 தி டைம்ஸில் வெளியான செய்தியிலும் நூற்றுக்கும் மேலான மக்கள் மன்னாரில் இலங்கை ராணுவத்தால் படுகொலைச் செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன் பின் 1990 களின் காலக்கட்டத்தில் தமிழ்ப் பகுதிகளுக்கு இலங்கை அரசாங்கம் பொருளாதார தடை விதித்தது. உணவு உட்பட அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் தமிழ் மக்கள் அல்லாடி வேளை பலர் ராணுவ எல்லைப் பகுதியை கடந்து மன்னாரிலிருந்து விடத்தல் தீவுக்கு கடல் வழியாக உணவுக்கான பொருட்களை எடுத்து வர சென்றுள்ளனர். அதில் பலர் ராணுவத்தின் கையில் சிக்கி காணாமல் போகியுள்ளனர். அவர்கள் பற்றி இன்று வரை எந்தவொரு தகவல்களும் இல்லை.


இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள மன்னார் புதைகுழி 1984 யில் நிகழ்ந்த படுகொலைகளின் எச்சங்களாக இருப்பதற்கு அதிகப்பட்ச வாய்ப்புகள் இருக்கிறது. இது தொடர்பாக இன்றுவரை எந்தவித சுதந்திர விசாரணையும் நிகழவில்லை. இது மட்டுமல்ல இன்னும் எவ்வளவோ புதைகுழிகள் இலங்கையின் வடகிழக்கு எங்கும் இருக்கக்கூடும். அந்த புதைகுழிகளை மறைப்பதற்காக இலங்கை அரசாங்கமும் ராணுவமும் என்ன மாதிரியான திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என்பதற்கான புதிய ஆதாரங்களையும் புலிகளின் கல்லறைகளை எதற்காக ராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளது என்பதற்கான அடிப்படைகளையும் விரைவில் 'இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது (This Land Belongs to the Army)' என்ற ஆவணப்படத்தின் வழியே வெளியிடப்படும். இலங்கை இனப்படுகொலையை எப்படி திட்டமிட்டு நிகழ்த்துகிறது என்பதற்கான ஆதாரங்களாக அது விளங்கும்.
மன்னார் புதைகுழி தொடர்பாக உடனடி நடவடிக்கை என்பது இலங்கை போரில் தொடர்பில்லாத நாடுகளில் 'தடயவியல் ஆய்வு' நடத்தப்பட வேண்டும், இலங்கை அரசு தலையீடு இல்லாத சர்வதேச நீதி விசாரணை வேண்டும். அதைவிடுத்து ஐக்கிய நாடுகள் சபையில் மீண்டும் ஓராண்டு இலங்கைக்கு வாய்ப்புகள் கொடுத்தால் , மீண்டும் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை மறைப்பதற்கான வேலைகளே நடக்கும்.


- மகா.தமிழ்ப் பிரபாகரன்
« PREV
NEXT »

No comments