Latest News

September 18, 2013

ஜெனிவாவில் மீண்டும் வெடித்தது சிறிலங்கா விவகாரம் – அமெரிக்காவும் ஜேர்மனியும் பாய்ச்சல்
by admin - 0

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது கூட்டத் தொடரில், இன்றும் சிறிலங்கா விவகாரம் குறித்து அமெரிக்காவும், ஜேர்மனியும் பிரச்சினை எழுப்பியுள்ளன.
நாடுகள் தொடர்பான தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்ட போது, சிறிலங்கா நிலவரம் குறித்து அமெரிக்காவும் ஜேர்மனியும் சிறிலங்கா நிலைமை குறித்த கவலை வெளியிட்டதுடன், சிறிலங்கா நிலைமை குறித்து கலந்துரையாடுவதில் பேரவை கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன.

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு அறிக்கையாளர்கள், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கான நாள் மற்றும் ஒழுங்குகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் அமெரிக்கப் பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்.

“மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள். அமைதியான மக்கள் போராட்டத்தை இராணுவ பலத்தின் மூலம் அடக்குதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மீறப்படுவது, மனிதஉரிமை ஆர்வலர்களுக்கு எதிரான மீறல்கள், சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நாம் தொடர்ந்து கவலை கொண்டுள்ளோம்.” என்றும் அமெரிக்க பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் மனிதஉரிமை நிலை குறித்த தமது கவலைகள் அதிகமாக உள்ளதாக ஜேர்மனிப் பிரதிநிதி ஹானட்ஸ் சூமேக்கர் தெரிவித்துள்ளார்.

“நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவோ, போரின் இறுதிக்கட்டத்தில் இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்து விசாரிக்கவோ சிறிலங்கா உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழ்மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவக் கூடும்.

ஆனால், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தப்பட்டாலும், 13வது திருத்தச்சட்டம் பலவீனப்பட்டுத்தப்படாதிருந்தாலுமே அது சாத்தியமாகும்.

அதேவேளை, ஊடகவியலாளர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள், தொண்டர் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் மோசமடைந்துள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments