Latest News

April 20, 2013

சீனாவில் கடும் நிலநடுக்கம்... 100 பேர் பலி: 400 பேர் படுகாயம்
by admin - 0


சீனாவில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் 100 பேர் பலியானார்கள். 400 பேர் படுகாயம் அடைந்தனர். கட்டிடங்கள் நொறுங்கின. இதனால் இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சீனாவின் தென் மேற்கு சிசுவான் மாகாணத்தில் இருந்து 80 மைல் தொலைவில் உள்ளது யான் நகரம். லுஷான் கவுன்டியில் அமைந்துள்ள இந்நகரில் இன்று காலை பூமிக்கு அடியில் 12 கி.மீ. ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டது. காலை 8.02 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் சீனாவின் புவியியல் ஆய்வு மையத்தில் ரிக்டரில் 7 புள்ளி ஆகவும், அமெரிக்க புவியியல் மையத்தில் ரிக்டரில் 6.6 புள்ளிகளாகவும் பதிவானது.
இந்த பூகம்பத்தால் பல கட்டிடங்கள், ஜன்னல்கள் நொறுங்கின. இதில் இடிபாடுகளில் சிக்கி 100 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம். அதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அலறி ஓடிய மக்கள் பூகம்பம் ஏற்பட்ட போது, வீட்டில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். மின்வயர்கள் அறுந்து விழுந்தன. தகவல் தொடர்பு சாதனம் முழுவதும் துண்டிக்கப்பட்டது. இடிபாடுகளில் 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏராளமானோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணியில் 2000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சீனா செங்டஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. சீனாவில் கடந்த 2008 ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர். சீன வரலாற்றில் இது மிகப்பெரிய மோசமான சம்பவம் ஆகும். இதை தொடர்ந்து அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. உயிரிழப்பு சம்பவமும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
« PREV
NEXT »

No comments